வியாழன், 17 நவம்பர், 2011

மழலை உலகம் மகத்தானது!


இந்த பதிவு தொடர் பதிவு என்பதால் இதனை தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொண்ட (சகோதரர் விசு) அவர்களுக்கு என் முதல் நன்றியும், வணக்கங்களும்.
இப்பதிவை மேலும் தொடர இருக்கின்ற அன்புச்சகோதரர்கள்
ஆகியோர்களுக்கும் என் நன்றியும்,வாழ்த்துக்களும்!

பெற்றோர்கள் பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க பழகிக்கொள்ள வேண்டும்.நமக்கு தெரியாததையா பிள்ளைகள் சொல்லி விட போகிறார்கள்?என்ற எண்ணமும்,பிள்ளைகள் சொல்லி நாம் கேட்பதா என்ற எண்ணமும் இருந்தால் அவர்கள் மேல் கோபம்தான் வரும்.

பெற்றோர்கள் எப்போதுமே பிரச்சனைகளை பிள்ளைகள் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதில்லை! தங்கள் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள்.அதனால்தான் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிவதில்லை!மாறாக குழந்தைகளின் கண்ணோட்டத்திலிருந்து பிரச்சனையை அணுகி தெளிவான தீர்வினை அவர்களுக்கு அளித்தால் கண்டிப்பாக குழந்தைகள் ஏற்றுக் கொள்வார்கள்.

குழந்தைகள் அன்பான வார்த்தைகளுக்காக ஏங்குகிறார்கள். தன் அப்பா,அம்மா தன்னிடம் கொஞ்சி பேச வேண்டும்.தனுக்கு பிடித்தமானவற்றை வாங்கித்தர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.உதாரணமாக ஆண்குழந்தைகளானால் தொப்பி,கண்ணாடி,கடிகாரம்,மோதிரம்,செயின்,பெல்ட்,ஷூ, விளையாட்டு பொம்மைகள் போன்றவற்றையும் பெண் குழந்தைகளானால் பூ,பொட்டு, வளையல், துணி,மணி, ,போன்ற தான் விரும்பும் எதையும் ஆசையுடன் வாங்கித்தர வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்கள்!பெற்றோர்களால் வாங்கித்தரப்படாத ஒவ்வொரு பொருளும் அவர்களுக்குள் தீராத ஏக்கமாக மாறி ஆழ்மனதுக்குள் புதைக்கப்படுகிறது.

குழந்தைகள் பிரச்சனைகளை சந்திக்கும் போதெல்லாம் பெற்றோர்கள் தமக்கு அன்பாகவும்,ஆறுதலாகவும் இருந்து வழி காட்டுவார்கள் என்று நம்புகிறாகள்.நம்பிக்கை உடையும்போது சில குழந்தைகள் பிரச்சனைகளை தானே சமாளிக்க கற்றுக்கொள்கிறார்கள்.சில குழந்தைகள் வேறு நபர்களின் உதவியை நாடத்தொடங்குகிறார்கள்.பிரச்சனை அங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.எனவே அவர்களுக்கு எப்போது பிரச்சனையோ அப்போதெல்லாம் பெற்றோரை ஒரு நண்பனாக எண்ணி பிரச்சனைக்கு தீர்வை நாடும்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் நல்ல ஆடை உடுத்த வேண்டும்.நன்றாக அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று. அவர்களிடம் இந்த உடையை உடுத்தாதே,இப்படி தலைவாராதே, அப்படி பவுடர் அடிக்காதே என்று படுத்தி எடுத்தால் பெற்றோர்களின் மேல் அவர்களுக்கு எரிச்சல்தான் வரும்.

குழந்தைகள் பெற்றோர் கொடுப்பது சிறிய பொருளாக இருந்தாலும்,பெரிய பொருளாக இருந்தாலும் தன் அப்பா அம்மா தனக்காக எடுத்து வைத்திருந்து கொடுக்கிறார்கள் என்று மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.மாறாக சிறியது,பெரியது,விலை உயர்ந்தது,விலை மட்டமானது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.எனவே அவ்வப்போது பரிசுகளையும்,பாராட்டுக்களையும் கொடுக்க மறக்காதீர்கள்.

குழந்தைகள் வெவ்வேறு வீடுகளுக்கு செல்லும் சமயங்களிலும், வெவ்வேறு விஷேசங்களுக்கு செல்லும் சமயங்களிலும் தன் அம்மாவின் சமையலை அந்த சமையலோடு ஒப்பிட்டு பார்க்கின்றன.ஆனாலும் இந்த சமையல் என் வீட்டில் என் அம்மா செய்து எனக்காக கொடுத்து நான் சாப்பிடுவது போல் ஆகுமா?என்றே நினைக்கின்றனர்.குழந்தைகளுக்கு தன் அம்மாவின் சமையலை மிஞ்ச யாருமில்லை என்ற நினைப்பே மேலோங்கி இருக்கும்.எனவே என் பிள்ளைக்கு இது பிடிக்கும் என்று ஏதாவது ஒரு சின்ன பொருளாவது செய்து கொடுங்கள்.

ஒரு கவிதை:

நாங்கள் ஜாலியாக இருப்பது
உங்களுக்கு சந்தோஷமில்லையா?
அப்படியாயின் உங்கள் பெயர்
பெற்றோர்கள்தானா?

மழலை உலகம் மகத்தானது என்பதில் மாற்று கருதுக்கு இடமில்லை!சகோதரர்கள் இன்னும் சிறப்பாக மழலை உலகத்தை மகிழ்ச்சி உலகமாக மாற்றட்டும்!

Follow This Blog !!!

புதன், 2 நவம்பர், 2011

மத்தாப்பூ


          காலையில் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது.அமுதா சமையலில் மும்மரமாய் இருந்தாள்.குமார் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.படித்து முடித்த பேப்பரில் ஏதாவது விட்டு விட்டோமா? என்று காபியை குடித்து கொண்டே தேடிக்கொண்டிருந்தான் வாசு.
"நாலு மாசமா சொல்லிக்கிட்ருக்கேன்.இந்த கண்ணாடியை கொஞ்சம் மாத்திதாப்பா.இது உடைஞ்சி ஆறு மாசமாச்சு.சரியாவே தெரிய மாட்டேங்குதுஎன்று கெஞ்சும் பாவனையில் சொல்லிக் கொண்டே உடைந்த கண்ணாடியை கொண்டு வந்தார் வாசுவின் அப்பா.
"பார்க்கலாம்,பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு "இவருக்கு வேற வேலையே இல்லை.சும்மா அத வாங்கி கொடு இத மாத்தி கொடுன்னு ஏதாவது ஒரு செலவு வச்சிட்டே இருப்பாருஎன்று முணு முணுத்தான் வாசு.
அதற்குள் குமார் ஓடிவந்து "அப்பா, அப்பா தீபாவளிக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு.பட்டாசு வாங்கித்தாப்பாஎன்று அடம் பிடித்தான்.
"டேய் சும்மா இருடா நீ வேற ஆரம்பிக்காத போடாஎன்று விரட்டினான் வாசு.
"அம்மா இங்க பாரும்மா! பட்டாசு வாங்கி தரமாட்டேன்னு சொல்றாரு அப்பா!"
என்று அமுதாவிடம் சென்று அழுது கொண்டிருந்தான் குமார்.
"பாரு,பட்டாசெல்லாம் கொளுத்தினா நிறைய புகை வரும்.புகை வர்ரதால நாம சுவாசிக்கிற காத்து அசுத்தமாயிடும். இந்த வெடி சத்தம் கேட்டு பறவைகள், விலங்குகள், குழந்தைகள், வயசானவங்க படுற கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை! காசு கொடுத்து வாங்கற பட்டாசு கரியாகி வீணாதானே போகுது? அதனாலதான் அப்பா வேணாம்னு சொல்றாருஎன்று குமாரை சமாதானம் செய்து கொண்டிருந்தாள் அமுதா.
வாசுவை தனியாக அழைத்து சென்று,"ஏங்க கொஞ்சமாவாவது அவனுக்கு பட்டாசு வாங்கி கொடுக்க கூடாதா?என்று கேட்டாள்.
"வாங்கி தர்றத பத்தி ஒண்ணுமில்லை! அப்பா செலவுக்கு காசு கேட்கும்போது, குமாரும் கேட்டவுடனே எனக்கு கோபம் வந்து விட்டது! சரி சாயந்திரம் அவனை கூட்டிப்போய் அவனுக்கு பிடித்ததாய் வாங்கித்தருகிறேன்" என்றான்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய குமாரை பட்டாசு வாங்க கடைக்கு அழைத்தான் வாசு.வேணாம்பா என்ற குமாரை நோக்கி "ஏம்பா அப்பா மேல கோபமா?" என்று கேட்டான்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை! தீபாவளிக்கு பட்டாசு வாங்க எவ்வளவு தருவீர்கள்?" என்று கேட்டான்.
"ஒரு முன்னூறு ரூபாய் அளவுக்கு வாங்கித்தருவேன்"
"எனக்கு பட்டாசு வேண்டாம்.அந்த முன்னூறு ரூபாயை கொடுங்கள் போதும்" என்றான் குமார்.
திடீரென்று முன்னூறு ரூபாய் அளவுக்கு இவனுக்கு என்ன செலவிருக்கிறது என்று நினைத்து கொண்டு, "ஏன் என்று சொல்! கண்டிப்பாக தருகிறேன்!" என்றான் வாசு.
"இன்று பள்ளிக்கூடத்தில் நிறைய பிள்ளைகள் வரவில்லை.அவர்கள் பட்டாசு கம்பெனியில் வேலை செய்கிறார்கள்! பட்டாசு வாங்குபவர்கள் இருக்கும் வரை,விற்பவர்கள் அதை செய்து கொண்டுதான் இருப்பார்கள்!வாங்குவதை நிறுத்தினால்தான் செய்வதை நிறுத்துவார்கள்.என் நண்பர்களும் பள்ளிக்கு வருவார்கள்.அது மட்டும் இல்லாமல் காலையில் அம்மா சொன்னதும் சரி என்று பட்டது! அதனால்தான் பட்டாசு வேண்டாம் என்றேன்".
"அது சரி. முன்னூறு ரூபாய் எதற்கு?" என்றான் வாசு.
"தாத்தா பாவம் அப்பா! நீ எனக்கு எல்லாம் வாங்கிக் கொடுப்பது போல் அவரும் உனக்கு வாங்கி கொடுத்திருப்பார்தானே!அதையெல்லாம் நீ மறந்து விட்டாய்.நான் அவருக்கு தீபாவளி பரிசாக ஒரு கண்ணாடி வாங்கித்தர நினைக்கிறேன்.அதற்குத்தான் அந்த முன்னூறு ரூபாய்!" என்று சொல்லிக்கொண்டிருந்த குமாரின் முகத்தில் மத்தாப்பூ வெளிச்சம்! வாசுவின் முகம் அந்த வெளிச்சத்தில் பிரகாசமானது! 

Follow This Blog !!!

புதன், 24 ஆகஸ்ட், 2011

உன்னை தவிர!

உன் கண்ணெதிரே 
நான் இருந்தும் 
என்னை தவிர 
மற்றவற்றை 
உன்னால் யோசிக்க முடிகிறது! 

என் கண்ணெதிரே 
நீ இல்லை என்றாலும் 
உன்னை தவிர
வேறெதுவும் 
என்னால் யோசிக்க முடியாது! 

Follow This Blog !!!

சனி, 11 ஜூன், 2011

மரம் நடு!



லக்ஷ்மி: வணங்குகிறேன் ஸ்வாமி!

மகாவிஷ்ணு: நலமுடன் இரு தேவி ஏன் இவ்வாறு உன் முகம் வாடியுள்ளது தேவி?

லக்ஷ்மி: நான் நமது மக்களை கண்டு கவலை கொண்டுள்ளேன் ஸ்வாமி!

மகாவிஷ்ணு: அவர்களுக்கு என்னவாயிற்று தேவி?

லக்ஷ்மி: ஸ்வாமி! இப்பொழுதெல்லாம் மக்கள் அமைதியுடனும் நலமுடனும் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை ஸ்வாமி!சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக அழிவதை கண்டு நான் கவலை கொண்டுள்ளேன் ஸ்வாமி!



மகாவிஷ்ணு: இது மட்டுமின்றி இன்னும் பல அழிவுகளும் ஏற்பட  வாய்ப்புள்ளது, தேவி!

லக்ஷ்மி: ஸ்வாமி! ஏன் மக்களை இவ்வாறு துன்பத்துக்கு  உள்ளாக்குகிறீர்?

மகாவிஷ்ணு: இது என்னால் ஏற்பட்ட துன்பம் இல்லை,  மக்களே தேடிக்கொண்ட துன்பம்,தேவி!

லக்ஷ்மி: என்ன ஸ்வாமி கூறுகிறீர்?

மகாவிஷ்ணு: ஆம், தேவி! இங்கே பார்!இந்த மக்கள் அனைத்து சுகங்களும் பெற்று நலமுடன் வாழவே இவ்வாறு பூமியை பசுமையான மரம், செடி, கொடிகளையும், நீர் நிலைகளையும் கொண்டு படைத்திருக்கிறேன்!




மகாவிஷ்ணு: இதை அழிக்க கூடாது என்பதற்காகவே, அவர்கள்
 பலன் பெரும் கையில் உணவாகவும், குடிநீராகவும் அமைத்தேன். எனினும்,இந்த மக்கள் அதை இவ்வாறு அழித்துக் கொண்டிருக் கின்றனர்.
                               
                              




லக்ஷ்மி: அதற்காக இது அதிகபட்ச தண்டனையாய் தெரிகிறது, சுவாமி! இதை தங்களால் தடுக்கவியலாதா?

மகாவிஷ்ணு: இல்லை, தேவி! அவர்கள் செய்த பாவச்செயல்களுக்கான பலன்களை அனுபவிக்க வேண்டியது நியதியாகும்.

லக்ஷ்மி: இதிலிருந்து மக்களை காப்பாற்ற ஏதும் வழி உள்ளதா? சுவாமி!

மகாவிஷ்ணு: ஒரு வழி உள்ளது, தேவி! மேலும் நீர்நிலைகளை அசுத்தம் செய்யாமலும்,மரங்களை அழிக்காமலும்,  புதிய மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமாகவும் இந்த இயற்கையின் சீற்றங்களை சற்றே குறைக்கலாம்.         

லக்ஷ்மி: நல்லது சுவாமி! நான் இப்போதே பூவுலகில் ஒரு  ஆசிரியையாக அவதரித்து மாணவர்கள் மூலம் இச்செயலை செய்ய எனக்கு அனுமதி தாருங்கள், ஸ்வாமி!


மகாவிஷ்ணு: நில்! தேவி! இது மாணவர்கள் மட்டும் அல்ல, குழந்தை முதல் பெரியவர் வரை உணர வேண்டும்.


மகாவிஷ்ணு: எனவே, நானும் இப்பூவுலகில் அவதரித்து ஒரு இயக்கத்தை ஆரம்பித்து மக்களிடையே இதுப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்படுத்தப் போகிறேன். வா! செல்வோம்!


















Follow This Blog !!!

செவ்வாய், 7 ஜூன், 2011

என்னுயிர் காதலியே!



கண்மை
ஆர்வம் கொண்டிருக்கிறது, 
உன் கண்களை 
தொட்டுப் பார்க்க!

செந்தூரம் 
மேலும் சிவந்திருக்கிறது,
உன் நெற்றியை 
தொட்டுப் பார்க்க!

காதணிகள் 
காத்துக் கொண்டிருக்கிறது,
உன் காதுகளை 
தொட்டுப் பார்க்க!

முத்து மாலை 
தேய்ந்துக் கொண்டிருக்கிறது,
உன் கழுத்தில் 
தவழ்வதற்காக!

 வளையல்கள் 
ஏங்கி கிடக்கின்றது,
உன் கைககளை 
தீண்டிப்  பார்க்க! 

பூவை மட்டும் 
அணிந்திருக்கிறாயே?

என் ஒரு நாள் வாழ்வில் 
உன்னை அலங்கரித்து 
பிறவிப் பலன் அடைய வேண்டும் 
என கெஞ்சியதோ?

பூ உன்னை 
அலங்கரிக்கிறதா?
நீ பூவை 
அலங்கரிக்கிறாயா?

பூவினால் 
நீ அழகா? 
உன்னால் 
பூ அழகா?

உலகில் அனைத்தும் 
உன்னை விரும்ப, 
உன் மனமோ 
என்னை விரும்ப,

என்ன தவம் செய்தேனோ?
என்னுயிர் காதலியே!




Follow This Blog !!!

சனி, 4 ஜூன், 2011

முதல் இரவு!

தலையணைகளின்
துணை 
தேவைப்பட்டது!

செல்பேசியின்
அழைப்பு மணியை 
மட்டுமே காதுகள்
எதிர்பார்த்து கொண்டிருந்தன!

காரணம் இன்றி உதடுகள்
சிரித்து கொண்டேயிருந்தன!

தூக்கத்தை
கண்கள்
மறந்து போயின!

இமைகள் 
மூடுவதற்கு 
மறுத்தன!

ஒளியும்
ஒலியும்
தேவையற்றதாய்
தெரிந்தன!

நான் உணராதவற்றை
முதன் முதலாய்
உணர்ந்தேன்!

கண்ணாளனே
நீ என்னுடன்
இல்லாத 
முதல் இரவு!





Follow This Blog !!!