புதன், 2 நவம்பர், 2011

மத்தாப்பூ


          காலையில் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது.அமுதா சமையலில் மும்மரமாய் இருந்தாள்.குமார் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.படித்து முடித்த பேப்பரில் ஏதாவது விட்டு விட்டோமா? என்று காபியை குடித்து கொண்டே தேடிக்கொண்டிருந்தான் வாசு.
"நாலு மாசமா சொல்லிக்கிட்ருக்கேன்.இந்த கண்ணாடியை கொஞ்சம் மாத்திதாப்பா.இது உடைஞ்சி ஆறு மாசமாச்சு.சரியாவே தெரிய மாட்டேங்குதுஎன்று கெஞ்சும் பாவனையில் சொல்லிக் கொண்டே உடைந்த கண்ணாடியை கொண்டு வந்தார் வாசுவின் அப்பா.
"பார்க்கலாம்,பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு "இவருக்கு வேற வேலையே இல்லை.சும்மா அத வாங்கி கொடு இத மாத்தி கொடுன்னு ஏதாவது ஒரு செலவு வச்சிட்டே இருப்பாருஎன்று முணு முணுத்தான் வாசு.
அதற்குள் குமார் ஓடிவந்து "அப்பா, அப்பா தீபாவளிக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு.பட்டாசு வாங்கித்தாப்பாஎன்று அடம் பிடித்தான்.
"டேய் சும்மா இருடா நீ வேற ஆரம்பிக்காத போடாஎன்று விரட்டினான் வாசு.
"அம்மா இங்க பாரும்மா! பட்டாசு வாங்கி தரமாட்டேன்னு சொல்றாரு அப்பா!"
என்று அமுதாவிடம் சென்று அழுது கொண்டிருந்தான் குமார்.
"பாரு,பட்டாசெல்லாம் கொளுத்தினா நிறைய புகை வரும்.புகை வர்ரதால நாம சுவாசிக்கிற காத்து அசுத்தமாயிடும். இந்த வெடி சத்தம் கேட்டு பறவைகள், விலங்குகள், குழந்தைகள், வயசானவங்க படுற கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை! காசு கொடுத்து வாங்கற பட்டாசு கரியாகி வீணாதானே போகுது? அதனாலதான் அப்பா வேணாம்னு சொல்றாருஎன்று குமாரை சமாதானம் செய்து கொண்டிருந்தாள் அமுதா.
வாசுவை தனியாக அழைத்து சென்று,"ஏங்க கொஞ்சமாவாவது அவனுக்கு பட்டாசு வாங்கி கொடுக்க கூடாதா?என்று கேட்டாள்.
"வாங்கி தர்றத பத்தி ஒண்ணுமில்லை! அப்பா செலவுக்கு காசு கேட்கும்போது, குமாரும் கேட்டவுடனே எனக்கு கோபம் வந்து விட்டது! சரி சாயந்திரம் அவனை கூட்டிப்போய் அவனுக்கு பிடித்ததாய் வாங்கித்தருகிறேன்" என்றான்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய குமாரை பட்டாசு வாங்க கடைக்கு அழைத்தான் வாசு.வேணாம்பா என்ற குமாரை நோக்கி "ஏம்பா அப்பா மேல கோபமா?" என்று கேட்டான்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை! தீபாவளிக்கு பட்டாசு வாங்க எவ்வளவு தருவீர்கள்?" என்று கேட்டான்.
"ஒரு முன்னூறு ரூபாய் அளவுக்கு வாங்கித்தருவேன்"
"எனக்கு பட்டாசு வேண்டாம்.அந்த முன்னூறு ரூபாயை கொடுங்கள் போதும்" என்றான் குமார்.
திடீரென்று முன்னூறு ரூபாய் அளவுக்கு இவனுக்கு என்ன செலவிருக்கிறது என்று நினைத்து கொண்டு, "ஏன் என்று சொல்! கண்டிப்பாக தருகிறேன்!" என்றான் வாசு.
"இன்று பள்ளிக்கூடத்தில் நிறைய பிள்ளைகள் வரவில்லை.அவர்கள் பட்டாசு கம்பெனியில் வேலை செய்கிறார்கள்! பட்டாசு வாங்குபவர்கள் இருக்கும் வரை,விற்பவர்கள் அதை செய்து கொண்டுதான் இருப்பார்கள்!வாங்குவதை நிறுத்தினால்தான் செய்வதை நிறுத்துவார்கள்.என் நண்பர்களும் பள்ளிக்கு வருவார்கள்.அது மட்டும் இல்லாமல் காலையில் அம்மா சொன்னதும் சரி என்று பட்டது! அதனால்தான் பட்டாசு வேண்டாம் என்றேன்".
"அது சரி. முன்னூறு ரூபாய் எதற்கு?" என்றான் வாசு.
"தாத்தா பாவம் அப்பா! நீ எனக்கு எல்லாம் வாங்கிக் கொடுப்பது போல் அவரும் உனக்கு வாங்கி கொடுத்திருப்பார்தானே!அதையெல்லாம் நீ மறந்து விட்டாய்.நான் அவருக்கு தீபாவளி பரிசாக ஒரு கண்ணாடி வாங்கித்தர நினைக்கிறேன்.அதற்குத்தான் அந்த முன்னூறு ரூபாய்!" என்று சொல்லிக்கொண்டிருந்த குமாரின் முகத்தில் மத்தாப்பூ வெளிச்சம்! வாசுவின் முகம் அந்த வெளிச்சத்தில் பிரகாசமானது! 

Follow This Blog !!!

2 கருத்துகள்:

  1. கதை, கருத்து விதை.

    மத்தாப்பூ சிரிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. இனிய தோழி... இன்றைய எனது மழலைகள் உலகம் மகத்தானது பதிவு, ஒரு தொடர் பதிவு என்பதால், அதை தொடர்ந்து எழுத உங்களையும் அழைத்துள்ளேன். அவசியம் தொடருங்கள்.

    http://vaazhveperaanantham.blogspot.com/2011/11/blog-post_14.html

    பதிலளிநீக்கு